கடவுச்சீட்டு மோசடி – சந்தேகநபர்கள் இருவர் கைது

வெளிநாட்டில் வசிக்கும் “கெலேஹெல்பத்தர பத்மே” என்றும் அழைக்கப்படும் மந்தினு பத்மசிறி பெரேரா என்ற ஒருவருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை போலியாக தயாரித்தது தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வணிக குற்றங்கள், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றங்களுக்கான குற்றப் புலனாய்வுத் துறையின் பிரிவின்படி, சந்தேக நபர்கள் மூன்று மோசடி கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு தவறான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
32 மற்றும் 51 வயதுடைய சந்தேக நபர்கள் மாளிகாவத்தை மற்றும் எஹெலியகொடவைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கொஹுவல மற்றும் பத்தரமுல்லையில் புகைப்பட ஸ்டுடியோக்களை நடத்தி வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளில், அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பத்மசிறியின் புகைப்படங்களைப் பெற்று, அவற்றைத் திருத்தி, போலி ஆவணங்களை குடிவரவுத் துறையிடம் சமர்ப்பித்து போலி கடவுச்சீட்டுகளை தயாரித்ததாக தெரியவந்தது.
2014 இல் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி 2021 இல் நாட்டை விட்டு வெளியேறிய பத்மே, அசல் கடவுச்சீட்டு காலாவதியான பின்னர், 2024 இல் வெளிநாட்டில் இருந்தவாறே ஒரு நாள் சேவை மூலம் புதிய கடவுச்சீட்டை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
கூடுதலாக, போலியான புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி 2025 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு கடவுச்சீட்டுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் மே 23 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்ப்டு மே 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மேலும் விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையின் தொடர்புடைய பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.