பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது

பாராளுமன்றம் நாளையும் நாளை மறுதினமும் கூடுகிறது

பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளையும் (18) மற்றும் நாளை மறுதினமும் (19) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இன்று (17) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான பாராளுமன்ற நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு திருப்புவதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு அன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க நிதி பற்றி சபையில் ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரான நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு விவாதம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் பாராளுமன்றம் கூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )