தலிபான்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – 15 பேர் பலி
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் நேற்று இரவு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் உள்ள தலிபான் மறைவிடங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், ஒரு முகாமை தகர்த்து சில கிளர்ச்சியாளர்களைக் கொன்றதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஆழமாகச் சென்றனவா அல்லது அவை எவ்வாறு சரியாக ஏவப்பட்டன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நேற்றிரவு (24) லமன் உட்பட ஏழு கிராமங்கள் இந்தத் தாக்குதல்களுக்கு இலக்காகியதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானங்களால் இந்தத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தாக்குதல்களால் பர்மாலில் உள்ள முர்க் பஜார் கிராமம் பெரும் அழிவை சந்தித்துள்ளதாகவும் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
வான்வழித் தாக்குதல்கள் கடுமையான சேதத்தையும் பொதுமக்களுக்கு பரவலான அழிவையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பர்மால், பக்திகா மீதான வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் சபதம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினுமு், இந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
இருப்பினும், ஆப்கானிஸ்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளதுடன், அவற்றை “கோழைத்தனமான செயல்” என்று முத்திரை குத்தியுள்ளது.
தாலிபான்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்த அண்டை நாட்டின் மண்ணைப் பயன்படுத்துவதாக இஸ்லாமாபாத் அடிக்கடி கூறுகிறது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறது.
மார்ச் 2024க்குப் பிறகு இதுபோன்ற இரண்டாவது தாக்குதல்கள் இவை. முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்குள் எல்லைப் பகுதிகளில் உளவுத்துறை அடிப்படையிலான தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தானின் சிறப்புப் பிரதிநிதி முகமது சாதிக் காபூலுக்குச் சென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.