
பாகிஸ்தானின் தீர்மானமும், ஐசிசி இன் இன் கவலையும்
2026 மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில், இந்தியாவிற்கு எதிரான போட்டியை மாத்திரம் புறக்கணிப்பதற்கும் ஏனைய போட்டிகளில் விளையாடுவதற்கும் பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறிப்பாக, 2026 மார்ச் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்தத் தலையீடு உலகளாவிய கிரிக்கெட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அதன் விளையாட்டு உணர்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
உலகக் கிண்ணம் போன்ற ஒரு சர்வதேச விளையாட்டுத் தொடரில், தகுதிபெற்ற அனைத்து அணிகளும் சமமான நிபந்தனைகளின் கீழ் போட்டி அட்டவணைக்கு அமைய விளையாட வேண்டும் என்பதே அடிப்படை விதியாகும்.
அவ்வாறிருக்கையில், ஒரு குறிப்பிட்ட போட்டியை மாத்திரம் புறக்கணிப்பது விளையாட்டு மனிதாபிமானத்திற்கு எதிரானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளது
பாகிஸ்தானில் உள்ள மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள விளையாட்டுப் பிரியர்களுக்கு இந்தத் தீர்மானம் ஏமாற்றத்தை அளிக்கும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை கூறியுள்ளது.
இத்தகைய முடிவுகள் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் கட்டமைப்புக்கும் நீண்டகால அடிப்படையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சிக்கலான நிலையைத் தணித்து, அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பரஸ்பர இணக்கப்பாட்டிற்கு வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
உலகக் கிண்ணத் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது
