பூஸா சிறைச்சாலையில் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுப்பு

பூஸா சிறைச்சாலையில் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுப்பு

கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பிரபல குற்றவாளிகளான லொக்கு பெட்டி, மிதிகம ருவன் மற்றும் தெமட்டகொட சமிந்த ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடங்களுக்குள் இருந்தும் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சில தொலைபேசிகள் சிறைக்கூடங்களின் தரையினுள் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்தவாறே கையடக்கத் தொலைபேசி ஊடாக குற்றச் செயல்களை இவர்கள் வழிநடத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தும், அதனைத் தடுப்பதற்கு அவர்கள் தவறியுள்ளதாக தெற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

இப்பின்னணியில், கடந்த 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலையின் அவசர கால மற்றும் தந்திரோபாயப் பிரிவினரும் இணைந்து விசேட தேடுதல் வேட்டையை நடத்தினர்.

இதன்போது, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் சமிது தில்ஷானின் அறையிலிருந்தும் ஒரு தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

‘குருல்லா’ எனப்படும் அமில ஹிருஷ்லால் என்பவரின் அறையில் ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் ரக தொலைபேசி, சார்ஜர் மற்றும் தரவு கேபிள் (Data Cable) என்பன கண்டெடுக்கப்பட்டன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவியின் அறையில் இருந்து இரண்டு வயர் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 84 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளில் மொத்தம் 159 சிம் அட்டைகள், 110 சார்ஜர்கள் மற்றும் இணைய வசதிக்கான ரவுட்டர்கள் (Routers) என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊழல் நிறைந்த அதிகாரிகள் மூலமாகவே இவை சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )