சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச

சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச

ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தில் எவருக்கும் ஜனாதிபதி நிதி வழங்கப்படவில்லை எனவும், அந்த நிதியை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கட்சிக்கு பதிலாக பல வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ள நிலையில் புதிய வேட்புமனுக்களை கோருவது நல்லது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் கீழ் வேட்புமனு தாக்கல் செய்த பலர் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தற்போதுள்ள வேட்புமனுக்களின் கீழ் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு சதித்திட்டத்தின் மூலம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அப்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையச் செய்யும் அளவிற்கு சூழ்ச்சி செய்தன.

அப்போது ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். ரணிலின் வேலைத்திட்டத்தையே இந்த அரசாங்கம் நடத்துகின்றது.

ஒரு அமைச்சர் அல்லது அரசியல் தொடர்புள்ள ஒருவர் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் செலவழிப்பதாக கூறப்படுவதுடன், இதுவரை ஜனாதிபதி நிதியத்தினால் உதவி செய்யப்பட்ட ஏனையவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும்.

இதன்படி, ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். எங்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்படவில்லை.

அதிலிருந்து நாங்கள் பணத்தை எடுப்பதும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This