குடிபுகு சான்றிதழ் பெறாமல் இயங்கும் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளை தடை செய்யுமாறு உத்தரவு

கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து குடிபுகு சான்றிதழ் (COC) / அமைவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் வணிக நோக்கில் இயங்கும் நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளை உள்ளூராட்சி மன்றங்கள் தடை செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணித்தார்.
குடிபுகு சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமையாலும் குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமையாலும் உள்ளூராட்சி மன்றங்களால் வரி அறவிட முடியாத நிலைமை காணப்படுகின்றமையாலும் அதனால் ஏற்படும் வருமான இழப்பையும் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் என்பன வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், பருவமழை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னதாக திட்டங்களை நிறைவு செய்யுமாறு கோரினார். அத்துடன் இம்முறை குறைவான காலப் பகுதியினுள் அதிகளவான மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்படக் காரணமாக இடங்களை அடையாளப்படுத்தி இம்முறை அந்தப் பாதிப்பை குறைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுடன் இணைக்கப்படும் ஆவணங்கள் தொடர்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அந்த விண்ணப்பங்களை கிடப்பில்போடாமல் சம்பந்தப்பட்ட பொதுமகனுக்கு உடனடியாகவே அழைப்பை மேற்கொண்டு அவற்றைப்பெற்று விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து முடிக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
கழிவகற்றல் தொடர்பான விவகாரம் மிகப் பெரும் சவாலாக உருவாகிவரும் நிலையில் கொழும்பு மாநகர சபையால் கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உருவாக்கும் மின்உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பார்வையிட்டு அத்தகையை திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் போடுவதைக் கண்காணிக்கும் வகையில் சிசிரிவி கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் குறிப்பிட்டார். நல்லூர் பிரதேச சபை அவ்வாறு சிசிரிவி கமராக்களைப் பொருத்தி அதன் ஊடாக தண்டப் பணத்தை அறவிட்டு வருவதாக சபையின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
இன்றைய கலந்துரையாடலில், உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன. ஒப்பந்தகாரர்களால் சில இடங்களில் வேலைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, திட்டமிடல், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், மாகாணப் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் பங்கேற்றனர்.