தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை தடுக்க எதிரணி சதி

“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வை தடுப்பதற்குரிய சுழ்ச்சியில் எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் ஜனவரி முதல் நிச்சயம் சம்பள உயர்வு வழங்கப்படும். தோட்டத் தொழிலாளர்கள் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடாமலேயே இம்முறை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 350 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்றே உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், 400 ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
கம்பனி தரப்பில் இருந்து 200 ரூபாவும், அரசாங்கத்தால் 200 ரூபாவும் வழங்கப்படும். இதற்கமைய நாளொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரத்து 750 ரூபாவை பெறமுடியும்.
இந்நிலையில் எதிரணியிலுள்ள எம்.பிக்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அரசாங்க பணத்தை எப்படி கம்பனிகளுக்கு வழங்க முடியும் என கேள்வி எழுப்புகின்றனர். இது தவறு. அவ்வாறு கொடுப்பனவு வழங்க முடியாது எனக் கூறிவருகின்றனர். இப்படியொரு கருத்தை உருவாக்கி, தமது சகாக்களை நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு முற்படக்கூடும்.
தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு விவகாரத்தில் காலை வாருவதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. சமூகத்தில் வதந்தியை பரப்புவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.
எது எப்படி இருந்தாலும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஜனவரி மாதம் முதல் நிச்சயம் சம்பள அதிகரிப்பு கிடைக்கப்பெறும்.” என அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.
