போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டார் கருத்து வெளியிடுகையில், இந்தியத் தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அகமதுபூர் கிழக்கு நகரில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.
இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியது.
கடந்த மாதம் 22ஆம் திகதி பஹல்காமில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் வெடிக்கும் என்ற நிலைப்பாடு உருவாகியது. இதனையடுத்து இரு நாடுகளும் இந்த விடயத்தில் பொறுமையை கடைப்பிடிக்குமாறு உலக நாடுகளும் வலியுறுத்தியிருந்தன.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று (ஏழாம் திகதி) போர் கால ஒத்திகை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையிலேயே, இன்று அதிகாலை ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தியப் படைகள் மூன்று இடங்களில் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானைத் தாக்கியதாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் மேற்கோள் காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் பலத்த வெடிப்புகள் ஏற்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தாக்குதலை தொடர்ந்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்றும் மூடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை, இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பீம்பர் காலி பகுதியில் பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தின் பல பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் மூன்று இந்திய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஐந்து இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.