2023இல் 16 வீடுகள் மாத்திரமே தோட்ட அமைச்சால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன – வெளியானது கணக்காய்வு தகவல்
இந்திய வீட்டுத்திட்டத்தின் (கட்டம் 01) கீழ் ரூ.100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2023ஆம் ஆண்டில் 154 வீட்டுத் தொகுதிகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டின் இறுதி வரையில் பௌதீக இலக்கு 16 வீடுகள் மாத்திரமேயான அதாவது 10 சதவீத அளவிலான மிகக் குறைவான நிலையில் அடையப்பட்டிருந்ததாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அறிக்கையில் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பிலான கணக்காய்வுகளில் பிரகாரம்,
தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் துறைக்கு உரித்தாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்காகவும், தற்போதுள்ள வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாகப் புதுப்பிப்பதற்குமாக ரூபா 155 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும், குறித்த காலப்பகுதியின் போது எவ்வித பணமும் செலவிடப்பட்டிருக்கவில்லை. இதற்காக தேவையான பாடசாலைகளைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.
பசுமைத் தங்க வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கண்டியில் உள்ள ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் 15 வீட்டுத் தொகுதிகளுக்கு ரூபா 3.36 மில்லியன் மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்ததுடன் 2023 திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் மொத்தத் தொகையும் செலவிடப்பட்டிருந்த போதிலும் செயற்திட்டம பூர்த்திசெய்யப்பட்டிருக்கவில்லை.
மேலும், 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நுவரெலியா, ஹட்டன், கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த 211 வீட்டுத் தொகுதிகளிற்காக ரூபா 48.14 மில்லியன் செலவிடப் பட்டிருந்த போதிலும் 05 வருடங்கள் கடந்திருந்த போதிலும், முதல் கட்டப் பணிகள்மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன் மேலும் 298 வீடுகள் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 05 ஆண்டுகள் கடந்திருந்த போதிலும் இதற்காக 2023 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் ரூபா 117.18 மில்லியன் செலவிடப்பட்டிருந்த போதிலும், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருக்க வில்லை.
2021 ஆம் ஆண்டில் போது புதிய வாழ்வு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட நுவரெலியா, ஹட்டன், கண்டி மற்றும் கேகாலை பகுதிகளில் 08 தோட்டங்களில் 157 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 112.53 மில்லியன் மதிப்பீட்டுத் தொகையில் ரூபா 92.34 மில்லியன் அதாவது 82 சதவீதம் செலவிடப்பட்டு முதல் கட்டம் மாத்திரம் பூர்த்திசெய்யப்பட்டிருந்தது. இவ்வாறே, 2020 ஆம் 2021 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிப்புகன் ஆரம்பிக்கப்பட்ட நுவரெலியா, ஹட்டன், கண்டி பகுதிகளில் 104 வீட்டுத் தொகுதிகள் 06 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய போதிலும் இதற்காக ரூபா 45.58 மில்லியன் செலவிடப்பட்டிருந்த போதிலும் 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை 03 ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதிலும் நிர்மாணப் பணிகள் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கவில்லை.
2020 ஆம் 2021 ஆம் ஆண்டுகளில் நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த கேகாலை மற்றுமு ஹட்டன் பகுதிகளில் மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா 173.24 மில்லியனான 56 வீட்டுத் தொகுதிகளின் நிர்மாணப் பணிகள் 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.
தோட்ட மனித அபிவிருத்தி அறக்கட்டளை மற்றும் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புடன் இணைந்து பணம் செலுத்தும் வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தின் படி, வீட்டுத் திட்டம் 06 மாத காலத்திற்குள் பூர்த்திசெய்யப்பட்டு கையளிக்கப்பட வேண்டிய போதிலும் 2016 முதல் 2021 ரையான ஆண்டுகளின் போது ஆரம்பிக்கப்பட்ட 62 வீட்டுத் திட்டங்கள் 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் நிறைவடைந்திராததுடன் அச் செயற்திட்டங்களின் நிர்மாணிப்புக் கால எல்லை 19 மாதங்கள் முதல் 85 மாதங்கள் வரையான வீச்சில் காணப்பட்டது.
அந்தச் செயற்திட்டங்களின் ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவிற்காக ரூபா 846.84 மில்லியன் தொகையும் கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூபா 51.36 மில்லியன் தொகையும் தோட்ட மனிதவள அபிவிருத்தி அறக்கட்டளைக்கு அமைச்சால் செலுத்தப்பட்டிருந்தது. இச் செயற்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக பொருத்தமான ஒப்பந்ததாரர்களை தெரிவு செய்யாமை மற்றும் அமைச்சின முறையான மேற்பார்வையின்மை இந்தத் தாமதத்திற்கு வழிவகுத்தன என்றும் தேசிய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.