ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் அவசரமாகத் திருத்தப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாக்க ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் அவசரமாகத் திருத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்களை அடையாளம் காண பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினரிடமிருந்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.
சட்டத்தைத் திருத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், பொதுப் பாதுகாப்பு, ஊடகம் மற்றும் நீதி ஆகிய மூன்று அமைச்சகங்களும் திருத்தங்களுடன் கூடிய கருத்துப் பத்திரத்தைத் தயாரிக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, வழக்குத் தொடரப்படவில்லை அல்லது சிறையில் அடைக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதனைக் கூறினார்.