வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இணையவழி கடவுச்சீட்டு – அமைச்சரவை முடிவுகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இணையவழி கடவுச்சீட்டு – அமைச்சரவை முடிவுகள்

– நீண்டதூர சேவைக்காக 5 புகையிரத எஞ்சின்கள் கொள்வனவு
– குருதிச்சோகை நோயாளிகளுக்கு 400,000 தடுப்பூசி குப்பிகள்
– இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளுக்கு வரி விதிப்பு

வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணி குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 8 தீர்மானங்களுக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணிக்குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான முறைமையை துரிதப்படுத்துவதற்காக குறித்த செயற்பாடுகளை நிகழ்நிலையாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு பெறுதல் தொடர்பான முன்மொழிவு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்கு (IOM) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 20 தூதுப்பணிக்குழுக்கள்/அலுவலகங்கள் உள்ளடங்கும் வகையில் உயிர்க்குறிகள் சேரிப்பு நிலையம் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் நிகழ்நிலையில் தொடர்பு கொள்வதற்கான வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைவதற்கு உரிய முறைமைகள்/மென்பொருட்களின் அபிவிருத்தி மற்றும் தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம்,வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி துரிதமாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் கண்டுள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக்குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச் சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. இலங்கையின் தேசிய இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயம்: 2025 – 2029
2018 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயம் 2019 ஆண்டு தொடக்கம் 2023 ஆண்டு வரை அமுல்படுத்தப்பட்டது. இலங்கை கணணி அவசர பதிலளிப்புக் குழுவினால் (Sri lanka CERT) முதலாவது இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயத்தின் அடிப்படை மற்றும் உலக வங்கியின் உதவியுடன் இணையவழி பாதுகாப்பு தொடர்பான “இலங்கையின் தேசிய இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயம் 2025 – 2029” தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான சிவில் துறைகள் மட்டுமே உள்ளடக்கப்படும் வகையில் சட்ட ரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டகத்தை மேம்படுத்துதல், அறிவை அதிகரித்தல், இணையவழிப் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துதல்,பதில்வினையாற்றல் திறனை அதிகரித்தல் மற்றும் ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் ஆகிய தொனிப்பொருட்களை அடிப்படையாக கொண்டு மேற்குறித்த மூலோபாய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, “இலங்கையின் தேசிய இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயம் 2025 – 2029” அமுல்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

3. இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு 05 புகையிரத எஞ்சின்களுக்கான பெறுகை
போக்குவரத்து நெரிசல்மிகுந்த பிரதேசங்களில் பயணிகள் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குப் பொருத்தமான புகையிரத எஞ்சின்கள் தற்போது இலங்கைப் புகையிரத திணைக்களத்திடம் இல்லை. அதனால், நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படும் புகையிரத எஞ்சின்களில் பெருமளவானவை 20 ஆண்டுகளுக்கும் அதிக காலம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையால், அடிக்கடி திடீர் இயந்திர செயலிழப்புகள் மற்றும் இயக்கங்கள் தடைப்படுகின்றன. அதனால் நாளாந்தம் தமது தேவைகளுக்கு புகையிரதங்களைப் பயன்படுத்தும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது இயக்குகின்ற புகையிரத சேவைகளை மேற்கொண்டு செல்வதற்காக குறைந்தபட்சம் 96 புகையிரத இயந்திரங்கள் தேவைப்படுவதுடன், தற்போது சில புகையிர எஞ்சின்ககள் பற்றாக்குறையாக உள்ளன. அதற்கமைய, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதேசங்கள் மற்றும் நீண்டதூர சேவைகளில் ஈடுபடுத்துவதற்காக 5 புகையிரத எஞ்சின்களின் பெறுகைக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. டேஸ்பெரிஒக்சமின் மெய்லட்பீபி 500 மில்லிகிராம் தடுப்பூசி மருந்துக் குப்பிகள் 400,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை
குருதிச்சோகையால் பாதிக்கப்படும் நோயாளிகளின் அல்லது தலசீமியா நோயாளிகளின் உடலிலுள்ள மேலதிக இரும்புச் சேர்க்கையை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் டேஸ்பெரிஒக்சமின் மெய்லட் தடுப்பூசி பீபி 500மில்லிகிராம் 400,000 ஊசி மருந்துக் குப்பிகள் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனு கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது. அதற்காக இரண்டு விலைமனுதாரர்களால் விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில் கணிசமாகப் பதிலளித்துள்ள ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் M/s ABC Pharma Services (Pvt) Ltd நிறுவனத்துக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியது.

5. உள்ளூராட்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மலக் கழிவுநீர் மற்றும் மலக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்துவற்காக சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல்
போதுமானளவு மலக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்மையால் நாட்டில் மலக் கழிவுநீர் மற்றும் மலக்கழிவு முகாமைத்துவம் செய்யும் சேவை சங்கிலியை முழுமைப்படுத்துவதில் தடைகள் காணப்படுகின்றது. அதனால் சில சந்தர்ப்பங்களில் ஒன்றுசேர்க்கின்ற மலக்கழிவுகள் முறையற்ற விதத்தில் திறந்த சுற்றாடலில் வெளியகற்றப்படுகின்றன. கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையின் கீழ் மலக் கழிவுநீர் மற்றும் மலக்கழிவு முகாமைத்துவத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியிலிருந்து ரூ. 200 மில்லியன் தொகையை பாவித்து தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் இயந்திரப் பொறிமுறை மலக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியுள்ளது.

6. இரண்டாம்நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளின் இயலளவை மேம்படுத்தும் திட்டம்
நாடளாவிய ரீதியில் இரண்டாம்நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளில் தரப்பண்பு மற்றும் இயலளவை அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்காக பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட உதவியாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச திட்டத்தின் கீழ் இரண்டாம்நிலை சுகாதார சேவை வைத்தியசாலைகளின் சேவை இயலளவு மற்றும் தரப்பண்பை மேம்படுத்துதல், மருந்து விநியோகச் சங்கிலி, சுகாதாரப் பெறுகை மற்றும் நிதியிடல் முறைமையின் வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனைப் பலப்படுத்துதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டமைந்துள்ளன. பெறுபேறு கிடைக்கும் கடன் வழங்கும் முறைமை ஊடாக வழங்கப்படும் மேற்குறித்த நிதியைப் பயன்படுத்தி, குறித்த கருத்திட்டத்தை 2025 தொடக்கம் 2030 வரை அமுல்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. 1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடை, அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்தல் – விடய இலக்கம் 31)
1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடை, அலுவலக ஊழியர்களின் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் மூலம் கடை அலுவலக ஊழியர்களின் சேவை வசதிகள், சேவைக்காலம், மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை தொடர்பான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சட்டத்துக்கமைய தொழில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஏற்புடைய ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமுலிலுள்ள ஒழுங்குவிதிகளின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த ஒரு பெண் ஊழியர் தங்குமிட ஹோட்டலில் வரவேற்பு அலுவலரின், பெண்கள் அங்கி அறை ஊழியரின், பெண்களின் ஆடை அறை ஊழியரிகளின் அல்லது பெண்களின் மலசலகூட ஊழியரின் கருமங்களில் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னர் மற்றும் முற்பகல் 6.00 மணிக்கு முன்னர் சேவையில் ஈடுபடுத்தப்படலாம். இருந்த போதிலும் வதிவிட ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் பெண் ஊழியர்கள் இரவு 10.00 மணிவரை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படலாம் என்பதனால், குறித்த நடவடிக்கை செயற்பாடுகளை பேணும் போது பல்வேறு சிக்கல் நிலை தோன்றலாம் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, தங்குமிட ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பணியில் ஈடுபட்டுள்ள உணவு மற்றும் பானங்களை வழங்கும் கருமங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு கூடுதலான பெண் ஊழியர்கள் பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னரும், முற்பகல் 6.00 மணிக்கு முன்னரும் பணியில் ஈடுபடக்கூடிய வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 இலக்க கடைஅலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும் ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 3 ஆவது ஒழுங்குவிதியை திருத்தம் செய்வதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. தேச எல்லைகள் ஊடாக நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகள் (Cross – Boroder E-Commerce) மீதான வரிவிதிப்பு
இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளின் வேகமான வளர்ச்சியுடன் நாடுகளுக்கிடையில் இடம்பெறும் இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகள் ஊடாக இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளின் அளவும் கருத்தில் கொள்ளும் வகையில் அதிகரித்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. உதவும் முறைமைப்படுத்தல் சுழமைவை உருவாக்குவதன் மூலம் சிறப்பான பொருளாதார நன்மைகள் கிடைக்கும் இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளிலிருந்து வரி வருமானத்தை சேகரித்தலை முறைமைப்படுத்துதல் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலத்திரனியல் வர்த்தக மேடை ஊடாக மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பில் பின்பற்றப்படும் சுங்க ஒப்புதலளித்தல் நடவடிக்கை முறைகளில் சில குறைபாடுகள் இனங்காணப்பட்டு, அண்மைக் காலத்தில் இலங்கை சுங்கம் தனது சுங்க ஒப்புதலளித்தல் நடவடிக்கை முறைகளைத் திருத்தம் செய்துள்ளது. குறித்த திருத்தங்களை அமுல்படுத்துவதன் மூலம் தோன்றியுள்ள தாமதமடைதல், அதிகரித்த கொடுக்கல் வாங்கல் கிரயம், பொது மக்கள் நம்பிக்கை அற்றுப்போதல், விலைகள் தொடர்பான வெளிப்படைத் தன்மை மற்றும் எதிர்வுகூறும் இயலுமை குறைவடைதல் போன்ற நிலமைகள் இலத்திரனியல் வர்த்தக மேடைகளை பாவிப்பவர்களின் அதிருப்திக்கு ஏதுவாகியுள்ளது.

குறிப்பாக இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளில் தங்கியுள்ள தனிநபர்களான நுகர்வோர் மற்றும் சிறிய அளவிலான இறக்குமதியாளர்கள் பாதிப்புக்களுக்கு உட்பட்டுள்ளனர். குறித்த நிலைமையை கருத்திலெடுத்து, இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளுக்கு தற்காலிக தொழிற்பாட்டு சலுகையொன்றை வழங்கல் மற்றும் குறித்த விடயம் தொடர்பில் நீண்டகால முறைமைப்படுத்தல் பணிச்சட்டகத்தை செய்வதற்காக தொடர்புடைய நிறுவனங்களின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

Share This