
அளுத்கம பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 500 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘உனகுறுவே சாந்த’ என்பவரால் அளுத்கம மற்றும் வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் குறித்த போதைப்பொருளை வேறு ஒருவருக்குக் கையளிப்பதற்காக அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகில் அங்கு காத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கிந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, சந்தேகநபர் ‘உனகுறுவே சாந்த’ என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி ஒன்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
