சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச ஊடாக தேங்காய் ஒன்றினை 130 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும்.

தற்போது சதொச ஊடாக ஒரு லட்சம் தேங்காய்கள் விற்பனை செய்யப்படும் நிலையில் நாளை முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் விளையும் தேங்காய்கள் லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தேங்காய் உற்பத்தி தடைப்பட்டுள்ளதாக அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share This