கொழும்பு மாநகரிலும் என்பிபி ஆட்சி மலரும் – வசந்த சமரசிங்க

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சி அமைக்குமென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிதிச் சட்டத்தின் கீழான உத்தரவு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டை கைப்பற்ற எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட அனைத்து திட்டங்களும் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறினார்.
எதிர்க்கட்சியின் பக்கம் முன்னர் சாய்ந்திருந்த பல சுயேச்சைக் குழுக்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் இந்த சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை அணிதிரட்ட முயற்சித்தனர். இதன்போது, பல உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர விரும்பினால் தேசிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வதை வரவேற்பதாகவும், பாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவுடன் இணைந்த பல உறுப்பினர்கள் தம்முடன் ஏற்கனவே தொடர்பு கொண்டு அவ்வாறு செய்ய ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
கொழும்பு மேயராக வேண்டுமென்ற முயற்சியில் பாராளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மீண்டும் ஒருமுறை மாநகர சபைக்கு வெளியே இருந்து அதற்கான முயற்சிகளை வழிநடத்த முயன்றார். ஆனால் அதிகாரத்தைப் பெறுவதில் அவர் தோல்வியடைந்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.