வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி – 50% மானியம் வழங்க விண்ணப்பம் கோரல்

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த ஆண்டு மாகாண விசேட குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ், 50% மானிய அடிப்படையில் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்காக 14 திட்டங்களை அடையாளப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் பயனடைய விரும்பும் பண்ணையாளர்கள் தமது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புல் வளர்ப்பு மற்றும் பதனிடல், நல்லின பட்டிக்காளை மற்றும் பட்டிக்கடாக்கள் வழங்குதல், செயற்கை முறைச் சினைப்படுத்தல் கன்றுகளுக்கான ஊக்குவிப்பு பெறல், சிறிய அளவிலான பாற்பண்ணைகளுக்கான கால்நடை தொழுவங்களை கட்டுதல் மற்றும் புதுப்பித்தல், சிறிய நடுத்தர அளவிலான ஆட்டுப்பண்ணைகளுக்கு நல்லின ஆடுகளை வழங்குதல், உள்ளூர் இன ஆடுகளை இனவிருத்தி செய்யும் முகமாக பொருத்தமான கடா/மறி ஆடுகள், கொட்டகைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கல், ஆட்டுப்பண்ணையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஆட்டுக்கொட்டகை வழங்கல், தரமான மறி ஆடுகள் வழங்கல், விசேட தேவையுடைய குடும்பங்களுக்கான ஒரு மாத வயதுடைய கோழிக்குஞ்சுகள் 25இனை வழங்குதல், ஒரு மாத குஞ்சு வளர்ப்பதற்கான உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கல், வர்த்தக ரீதியான கோழிப்பண்ணைகள் புனர்நிர்மாணம் மற்றும் கட்டுமானம் செய்வதனை ஊக்குவிக்க உள்ளீடுகள் வழங்கல், மடியழற்சி நோய்க்கட்டுப்பாட்டுக்கான உள்ளீடுகளை வழங்கல், பல்கொள்கலன்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கல், பால்பதனிடல் தொடர்பான உபகரணங்கள் மற்றும் உள்ளீடுகள் வழங்கல் ஆகிய 14 செயற்றிட்டங்களுக்கே பண்ணையாளர்களிடமிருந்து பதிவுகளுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.