பட்ஜெட்டில் வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் – யாழ்ப்பாணத்தை தாண்டி ‘அபிவிருத்தி’ அனைத்து மாகாணங்களுக்கும்

பட்ஜெட்டில் வடமாகாணத்துக்கு முக்கியத்துவம் – யாழ்ப்பாணத்தை தாண்டி ‘அபிவிருத்தி’ அனைத்து மாகாணங்களுக்கும்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (18.02.2025) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கௌரவ ஜனாதிபதி அவர்களால் நேற்று திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகளவான நிதியும் வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தனது உரையில், வடக்கு அதிகாரிகள் கோரிய நிதியையே வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்யவேண்டும். எவ்வளவு விரைவாக அந்த நிதியை செலவு செய்து முடித்து மேலதிக நிதியை நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நாம் நிதியை திருப்பி அனுப்பாமலே நிதியை திருப்பி அனுப்பியதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பெருமளவு நிதி எமக்கு கிடைக்கப்பெறும் நிலையில் அதை உரிய முறையில் செலவு செய்யவேண்டும்.

எமது செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. எனவே வெளிப்படைத்தன்மையாக நிதியை விரைவாக செலவு செய்யவேண்டும்.

ஜனாதிபதியால் வீதி அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு சமமாகப் பகிரத் தேவையில்லை. தேவைப்பாடுகள் எங்கு அதிகமோ அங்கு அதிகளவு நிதியை ஒதுக்குங்கள். இந்தத் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்துகொண்டு தெரிவுகளை முன்னெடுக்காமல் வன்னிப் பிராந்தியத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று நேரடியாகப் பார்த்து தெரிவு செய்யுங்கள். அப்போதுதான் அந்த மக்கள் அனுபவிக்கின்ற வலி உங்களுக்குத் தெரியும்.

எமக்கு இந்தத் திட்டங்களைச் செயற்படுத்தி முடிப்பது சவாலானதுதான். எங்களால் முடியும் என நினைத்துக்கொண்டு இதைச் செய்யுங்கள். இரவு, பகல் பாராமல் இதைச் செய்யவேண்டும். நாங்கள் முன்மாதிரியானவர்கள் என்பதை செயலில் காட்டுங்கள்.

இந்தத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது ஊழல், இலஞ்சம் என்பன இருக்கக் கூடாது. எல்லாம் வெளிப்படைத்தன்மையாக நடைபெறவேண்டும். இந்த அரசாங்கத்தின் கொள்கையும் அதுதான், என்றார் ஆளுநர்.

Share This