வடக்கு ஆளுநர், சுவிஸ் தூதுவர் சந்திப்பு: மாகாண தேர்தல் பற்றியும் அவதானம்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண ஆளுநரால், வடக்கு மாகாணத்திலுள்ள சில கிராமங்கள் இன்னமும் பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளன என்றும் அங்கு வீதிக் கட்டுமானங்கள் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் போரின் பின்னர் தொழிற்சாலைகள் போதுமானதாக இல்லாமையால், வேலை வாய்ப்பு சவாலாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தான விமான சேவைகள் தொடர்பிலும் தூதுவர் கேட்டறிந்தார்.
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்துக்கான நேரத்தை குறைக்கும் நோக்குடன், கட்டுநாயக்காக – பலாலி இடையேயான இணைப்பு விமானச் சேவைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
பொருளாதார மேம்பாட்டுக்காக முதலீடுகளின் அவசியத்தை தூதுவர் வலியுறுத்தினார்.
இலங்கை முதலீட்டுச் சபையால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அதன் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த காலங்களில் இங்கு நிலவிய இலஞ்சம் மற்றும் ஊழல் காரணமாக பெருமளவு முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்றதைக் குறிப்பிட்ட ஆளுநர் தற்போதைய சூழலில் பெருமளவு முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக முன்வருவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளமையை தெரியப்படுத்திய ஆளுநர், உலக வங்கியைக் கூட இந்த மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த அதிமேதகு ஜனாதிபதி பணித்துள்ளமையையும் குறிப்பிட்டார்.
ஆனாலும், கொழும்பு மைய சில திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்வதையும் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த காலங்களைவிட வடக்கு மாகாணத்துக்கு மூன்று மடங்கு நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளமையையும் ஆளுநர் தெரியப்படுத்தினார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், செம்மணிப்புதைகுழி விவகாரம், தையிட்டி திஸ்ஸவிகாரை விவகாரம், மீள்குடியமர்வு செயற்பாடு, சிவில் நிர்வாகத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் தூதுக் குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
மேலும், மாகாணசபைத் தேர்தல், மாகாணசபை முறைமை தொடர்பாகவும் ஆளுநரிடம், தூதுக் குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த காலங்களில் மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.