
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக இம்மாதத் தொடக்கத்தில், ஒலியை விட வேகமாகச் செல்லும் ‘ஹைப்பா்சோனிக்’ ஏவுகணையையும், கடந்த டிசம்பரில் நீண்ட தூரம் பாயும் ‘க்ரூஸ்’ ஏவுகணையையும் அந்த நாடு சோதித்திருந்தது.
இது தவிர, அணுசக்தியால் இயங்கும் தனது முதல் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்கி வருவதாக வடகொரியா வெளியிட்ட புகைப்படங்களை வெளியிட்டு அதிா்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வட கொரிய தலைநகா் பியாங்யாங்கிற்கு வடகிழக்கே உள்ள பகுதியிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதை தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவம் உறுதி செய்துள்ளது.
முதல் ஏவுகணை பிற்பகல் 3.50 மணியளவிலும், அடுத்த ஏவுகணை 4. 02 மணிக்கும் ஏவப்பட்டதாகத் தெரிகிறது. சுமாா் 350 கிலோமீட்டா் தூரம் பயணித்த இந்த ஏவுகணைகள், கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஜப்பான் எல்லைக்கு வெளியே விழுந்தன.
ஜப்பான், தென் கொரியா கண்டனம்: வட கொரியாவின் இந்தப் புதிய சோதனை, பிராந்திய அமைதியைச் சீா்குலைப்பதாக தென் கொரியாவும், ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வட கொரியாவின் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் ஜப்பான் மட்டுமன்றி, ஒட்டுமொத்த சா்வதேச சமூகத்தின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஜப்பான் கடல் எல்லைக்கு வெளியே இந்த ஏவுகணைகள் விழுந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து வடகொரிய ஏவுகணைகளின் நகா்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்கத் தயாராக இருப்பதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
