“உரிமையும் இல்லை, படுக்கையும் இல்லை” – நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண் குற்றச்சாட்டு

“உரிமையும் இல்லை, படுக்கையும் இல்லை” – நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண் குற்றச்சாட்டு

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த குற்றச்சாட்டில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் விமானப் பணிப்பெண் தனது சிறை வாழ்க்கை குறித்து முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

21 வயதான சார்லோட் மே லீ, கடந்த வாரம் 1.2 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான போதைப் பொருளை கடத்தி வந்த குற்றச்சாட்டி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் கொழும்பிற்கு வடக்கே உள்ள நீர்கொழும்பு சிறையில் பெண்கள் பிரிவில் அவர் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில், தனது தற்போதைய வாழ்க்கை நிலைமைகள் குறித்து அந்தப் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்தவாறு பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு இங்கே மனித உரிமைகள் இல்லை என்று தோன்றுகிறது. படுக்கைகள் இல்லை, போர்வைகள் இல்லை. தூங்கும் இடம் நிறைய பெண்களுடன் ஒரு நீண்ட நடைபாதை போன்றது.

‘நான் ஒரு கான்கிரீட் தரையில் தூங்குகிறேன், எனக்கு தலையணையாக என் ஜம்பர் மட்டுமே உள்ளது. சீலிங் ஃபேன் உள்ளது, ஆனால் அது செயற்படவில்லை.

எனக்கு ஒரு ஜோடி துணிகள் மட்டுமே உள்ளன, வேறு எதுவும் மாற்றிக்கொள்ள முடியாது, எனக்கான மருந்துகளை நான் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கைதிகளுக்கு தூக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

துவைக்கும் வசதிகள் சரியாக இல்லை என்றும் சார்லோட் மேலும் கூறினார். ஷவர் உண்மையில் ஷவர் அல்ல, குளிப்பதற்கு ஒரு வாளி மட்டுமே உள்ளது. வேறு எதுவும் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் மட்டுமே வெயிலில் வெளியே இருக்க அனுமதிக்கப்படுகிறீர்கள், சில சமயங்களில் அன்று நீதிமன்றத்தில் நிறைய பெண்கள் இருந்தால் இன்னும் அதிகமாக இருக்க அனுமதிக்கப்படுகிறீர்கள்.

உணவு எனக்கு மிகவும் காரமாக இருப்பதால் நான் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை. நான் என் சட்டத்தரணிகளிடம் எனக்கு வேறு உணவு தேவை என்று சொன்னேன். அவர்கள் அதை ஒழுங்குப்படுத்துவதாகச் சொன்னார்கள்.

ஆனால் இன்னும் அவர்கள் அதைச் செய்யவில்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சிறையில் வேறு பிரித்தானிய நாட்டவர்கள் யாரும் இல்லாததால் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் என்று சார்லோட் பேசியுள்ளார்.

இங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்ற பிரித்தானியர்கள் அனைவரும் ஆண்கள், அதனால் நான் அவர்களைப் பார்க்க முடியாது. தொடர்புகள் எதுவும் இல்லையென குறிப்பிட்டுள்ளார்.

என் குடும்பத்தினருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளவவோ அல்லது கடிதம் எழுதவோ கூட முடியவில்லை.” என்றார்.

சார்லோட் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் எப்படி தனது பையில் வந்தது என்று தனக்குத் தெரியாது என்று அவள் கூறுகிறாள்.

‘நான் அவர்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அவர்கள் என்னை விமான நிலையத்தில் அழைத்துச் சென்றபோது நான் இதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில், தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண்ணுக்கு சிறைச்சாலை விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.

 

Share This