இலங்கையுடனான அணுமின் நிலைய திட்டத்தின் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் இல்லை

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு ஆதரவளிக்க தனது நாடு ஒப்புக்கொண்ட போதிலும் இலங்கை சார்பில் அதற்காக அதிக அவதானம் செலுத்தப்படவில்லை என கொழும்பிலுள்ள ரஷிய தூதுவர் லெவன் எஸ் தகர்யன் தெரிவித்தார்.
இந்த அணுமின் நிலைய திட்டம் தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும், அவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு நிலையான எரிசக்திக்கான முக்கிய ஆதாரமாக அணுசக்தியைக் கருதலாம், எனினும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மதிப்பை ஒப்புக்கொண்டாலும், காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் சவால்கள் எதிர்காலத்தில் இந்த ஆதாரங்களை முழுமையாக நம்பியிருப்பதைத் தடுக்கும் என்று அவர் கூறினார்.
ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைத்ததை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.
எனினும், பல்வேறு காரணங்களால் அந்தப் பயணம் இடம்பெறவில்லை என்றும், அதற்குப் பதிலாக அப்போதைய வெளியுறவு அமைச்சகச் செயலாளர் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்றும் கூறினார்.
மேலும், பிரிக்ஸ் குழுவில் இலங்கை இணைவதற்கான கோரிக்கை தொடர்பில் தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.