யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம் – வெளியானது அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம் – வெளியானது அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9 இற்குக் கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட  சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலர் தலைமையில் நேற்று புதன்கிழமை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலரினால் பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு அறிவுறுத்தல்கள் உரிய தரப்புகளுக்கு வழங்கப்பட்டன.

1. பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி மாலை வேளையில் பயணிக்கும்  யாழ்ப்பாணம் – உசன் வரையான இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சேவையை கெற்பேலி வரையில் நீடிப்பு செய்யுமாறு இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கு யாழ். மாவட்ட செயலர் அறிவுறுத்தினார்.

2. மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்த அது தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட செயலர் அறிவுறுத்தல் வழங்கினார்.

3. முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தனியார் கல்வி நிறுவனங்கள் தரம் 9 இற்குக் கீழ்ப்பட்ட வகுப்புகளை வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்திலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் மாணவர்களின் இணை பாடவிதானச் செயற்பாடுகளுக்காகக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்த தனியார் கல்வி நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட செயலர் கேட்டுக்கொண்டதுடன், இது தொடர்பில் பிரதேச செயலாளர்களை உரிய கல்வி நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் மற்றும் மாவட்ட ரீதியாக கிடைக்கப் பெற்ற 21 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாகவும் அதற்காக  எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர்  மேம்பாட்டு  உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை  உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share This