
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்த எதிர்க்கட்சி
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மக்கள் எதிர்ப்பை இதன் மூலம் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேணைக்கு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வஜனம் அதிகாரம் ஆகிய கட்சிகளும் ஆதரவளித்துள்ளன.
என்றாலும், எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இதுவரை தமது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சி பிரதமருக்கு சேறுபூசும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காதென அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தமக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தவே எம்மை மக்கள் தெரிவுசெய்யதனர். அதன் பிரகாரம் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
