மாகாண சபைக்குப் பதிலாக விரைவில் புதிய முறைமை – விளக்கமளிக்க டில்லி பறக்கும் ரில்வின் சில்வா

மாகாண சபைக்குப் பதிலாக விரைவில் புதிய முறைமை – விளக்கமளிக்க டில்லி பறக்கும் ரில்வின் சில்வா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபை முறைமையைப் பதிலீடு செய்யும் பிறிதொரு முறைமை தொடர்பாக ஆலோசித்து வருகின்றது என்றும், இந்தியாவுக்குச் செல்லவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பில் அங்கு கலந்துரையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாகாண சபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தாலும், இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை.

கடந்த வாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்திய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை.

இந்தநிலையில், மாகாண சபை முறைமையைப் பதிலீடு செய்யும் பிறிதொரு முறைமை தொடர்பாக அரசு ஆலோசித்து வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனிவரும் காலங்களில் மாகாண சபைகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பேசுவதில் அர்த்தமில்லை என்றும், அதைப் பதிலீடு செய்யக்கூடிய மாற்றுவழிகள் தொடர்பாக சிந்திப்பது அவசியம் என்றும் அரசின் நெருக்கமான கொழும்பு வட்டாரங்களில் இருந்து கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தபடி எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளில் மாகாண சபை முறைமையை பதலீடு செய்யும் முறைமை தொடர்பாக ஆராயப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )