
இங்கிலாந்து-வேல்ஸில் கடுமையான குற்றங்களுக்கு புதிய தேசிய காவல் சேவை
கடுமையான குற்றங்களை எதிர்கொள்ளவும், உள்ளூர் காவல் படைகள் அன்றாட குற்றங்களில் கவனம் செலுத்தவும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தேசிய காவல் சேவை (National Policing Service – NPS) உருவாக்கப்படும் என உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) அறிவிக்க உள்ளார்.
பயங்கரவாதம் , மோசடி , ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போன்ற பெரிய குற்றங்களை இந்த தேசிய காவல் சேவை கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தேசிய புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்பு போன்று தேசிய காவல் சேவை செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை ஈர்த்து, அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து காவல் படைகளுக்கும் புதிய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வாங்கும் பொறுப்பும் தேசிய காவல் சேவைக்கு
வழங்கப்படும்.
இதில் நாடு முழுவதும் முக அங்கீகார தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதும் அடங்கும். லண்டனில் மட்டும் இந்த தொழில்நுட்பம் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,700 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய குற்றவியல் நிறுவனம் , பயங்கரவாத எதிர்ப்பு காவல் , பிராந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுகள், காவல் ஹெலிகாப்டர்கள் மற்றும் தேசிய சாலை காவல் ஆகியவை அனைத்தும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
மேலும், நாட்டின் மிக மூத்த காவல் அதிகாரியாக செயல்பட ஒரு தேசிய காவல் ஆணையர் (National Police Commissioner) நியமிக்கப்படுவார்.
தற்போதைய காவல் அமைப்பு நவீன குற்றங்களுக்கு பொருத்தமற்றதாக இருப்பதாக கூறிய உள்துறைச் செயலாளர், புதிய அமைப்பு மூலம் உள்ளூர் காவல் படைகள் தங்கள் சமூகங்களில் குற்றங்களைத் தடுக்க அதிக நேரம் செலவிட முடியும் என தெரிவித்துள்ளார்.
