‘மெட்ரோ’ பஸ் நிறுவனத்தின் கீழ் புதிய சொகுசு பஸ் சேவை

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து அமைப்புகள், பஸ்கள், பாதைகள் மற்றும் ரயில் சேவைகள் மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
2025ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நேற்று திங்கட்கிழமை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
”இலங்கையின் போக்குவரத்து அமைப்பில் ஒரு முன்னோடித் திட்டமாக மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன, வசதியான பஸ்களின் தொகுப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கொழும்பு நகர நுழைவு எல்லைக்குள் அடையாளம் காணப்பட்ட மூன்று முக்கிய சாலை வழித்தடங்களில் 100 சொகுசு பஸ்கள் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். அடையாளம் காணப்பட்ட மூன்று வழித்தடங்களான கொட்டாவ – புறக்கோட்டை, கடவத்த – புறக்கோட்டை மற்றும் மொரட்டுவ – புறக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு இந்த பஸ் சேவை ஆரம்பட்டமாக இயக்கப்படும்.
பஸ்களை கொள்வனவு செய்வதற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தனது நிதியைப் பயன்படுத்தி பொதுப் போக்குவரத்து சேவைகளுக்காக இதுபோன்ற 200 சொகுசு பேருந்துகளை செயல்படுத்தும். இது நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கான முதல் படியாகும்.
இந்த பேருந்துகள் கூட்டாக மெட்ரோ பஸ் நிறுவனங்கள் (MBC) என்று அழைக்கப்படும் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனத்தின் கீழ் இயக்கப்படும்.
இதற்கிடையில், முன்மொழியப்பட்ட பஸ்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அமைப்பின் கீழ் இயங்கும்.” என்றார்.