2026 இல் ஆரம்பிக்கப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பு

2026 இல் ஆரம்பிக்கப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பு

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமர் கூறினார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர் ஆலோசனைக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடிய போது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு ஐந்து பிரதான தூண்களின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படவிருப்பதாகக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, புதிய பாடநெறியை அறிமுகப்படுத்தல், மனிதவளத்தை மேம்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், பொது மக்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் உரிய மதிப்பாய்வு மேற்கொள்ளல் போன்ற பிரதான விடயங்களின் கீழ் இந்தக் கல்வி மறுசீரமைப்பு தரம் ஒன்று முதல் தரம் ஆறு வரையான மாணவர்களுக்காக 2026ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

கல்வி, உயர்கல்வி மற்றம் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுடன் இணைந்ததாக ஆறு உப குழுக்களை அமைப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பு, பாடசாலைகளில் காணப்படும் பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகள், பாடசாலைகளில் இடைத்தர வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதித்தல், கல்விச் சபையை நிறுவுதல், உயர் கல்விப் பிரிவு, திறன்கல்விப் பிரிவு ஆகியவற்றின் கீழ் ஆலோசனைக் குழுவுடன் இணைந்ததாக ஆறு உப குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன், குறித்த அமைச்சுத் தொடர்பில் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் காணப்படும் விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This