இந்தியாவைச் சமாளிக்க பாகிஸ்தான் இராணுவத்தில் புதிய படைப் பிரிவு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், இந்தியாவுடனான மோதலைச் சமாளிக்க இராணுவத்தில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
போர் நடந்தால் அதில் பயன்படுத்தப்படும் ஏவுகணையின் ஆற்றல்களை மேற்பார்வையிடும் அந்தப் பிரிவுக்கு ‘இராணுவ ரொக்கெட் படை’ என பாகிஸ்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் பிரதமர் ஷரிஃப் புதிய இராணுவப் பிரிவை அறிவித்துள்ளார்.
அண்டைய இந்திய நாட்டின் இராணுவமும் பாகிஸ்தான் இராணுவமும் கடந்த மே மாதம் மோதிக்கொண்டன. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கு இடையில் நிகழ்ந்த மோதல் அது.
ஏப்ரல் மாதம் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 26 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்தே இந்த மோதல் வெடித்தது.
புதிய படை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று ஷரிஃப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் இராணுவத்தின் போர்த்திறனை வலுப்படுத்துவதில் இந்தப் படை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்தப் புதிய படை எப்போது நிறுவப்படும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
இதற்கிடையே, பாகிஸ்தானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி புதிய படை எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கி உள்ளார்.
போர் நிகழும்போது ஏவுகணைகளைக் கையாளவும் அவற்றைப் போரில் ஈடுபடுத்தவும், இராணுவத் தலைமைக்கு அப்பாற்பட்டு தனது சொந்தத் திறன்களை புதிய படை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஏற்பாடு இந்தியாவை மனதில் கொண்டு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.