15 வருடங்களுக்கு முன்னர் ஒருவரை காணாமலாக்கிய குற்றச்சாட்டில் கடற்படை தளபதி விளக்கமறியலில்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பிரதேசங்களில் இருந்து கடத்தப்பட்ட பதினொரு பேர், நிலக்கீழ் சித்திரவதைக் கூடத்தில்தடுத்து வைக்கப்பட்டிருந்த சம நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நம்பகமான ஆதாரங்கள் காணப்படும் மற்றொரு நபர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய, குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி எதிர்வரும் ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 28ஆம் திகதி குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் வரையில் (ஜூலை 30) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுபெற்ற) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன இன்றைய தினம் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அலவ்வ பகுதியைச் சேர்ந்த ஒருவரை காணாமல் ஆக்கிய வழக்கில், இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதி அட்மிரல் (ஓய்வுபெற்ற) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்ன, ஜூலை 28ஆம் திகதி குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 22, 2010 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் காணாமல் போன கனேரலாலகே சாந்த சமரவீரவை வைத்திருந்ததாக நம்பப்படும் கடற்படை சித்திரவதைக் கூடம், அப்போதைய கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் இயங்கியது.
கடத்தலுக்குள்ளான 48 வயது நபர் ஒருவர் பல நாட்களுக்கு பின்னர் தடுப்பு மையத்திலிருந்து அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் எந்த ‘தடுப்பு மையம்’ என்பது தொடர்பில் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
காணாமல்போன சாந்த சமரவீர கடற்படையின் இரகசிய தடுப்பு முகாமான கன்சைட் நிலக்கீழ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயல்திட்டம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியிருந்தது.
100 பக்கங்களுக்கும் மேலான இந்த அறிக்கை, “முற்றாகப் பாராமுகம் காட்டும் இலங்கை கடற்படை” என தலைப்பிடப்பட்டுள்ளதோடு, கொழும்பிலும் அதைச் சுற்றியும் கடத்தப்பட்டு பின்னர் கன்சைட் முகாமில் இருந்து காணாமல்போன 11 பேர் தொடர்பான, பொலிஸ் விசாரணை குறிப்புகள், நீதிமன்ற பதிவுகள் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆராய்ந்து தொகுக்கப்பட்டதாகும்.
சாந்த சமரவீர தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக, கன்சைட் முகாமில் சுமார் ஒரு வருடம் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை புலனாய்வு அதிகாரியான பஸ்நாயக்க முதியன்சலாகே விஜயகாந்த், 2008-09 ஆம் ஆண்டு 11 பேர் கடத்தப்பட்டமை குறித்த விசாரணைகளை முன்னெடுத்த குற்றவியல் விசாரணை பிரிவிடம் தெரிவித்திருந்தார். இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த பிரகீத் நிசங்சல விதானாராச்சியும் அவருடன் இருந்ததாக பொலிஸார் மேலும் வெளிப்படுத்தியிருந்தனர்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததிலிருந்து அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
சாந்த சமரவீர காணாமல் போனமை குறித்து முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த வரும் குற்றவியல் விசாரணை பிரிவு, சமன் குமார திசாநாயக்க என்ற பிரதம பொலிஸ் பரிசோதகரை கைது செய்ததாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி 2023 டிசம்பரில் கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். எனினும், அந்த நேரத்தில், அந்த விசாரணைகளும் பதினொரு பேர் கடத்தல் தொடர்பான விசாரணைகளும் இணைத்து மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.
பொலிஸாரும் கடத்தலில் ஈடுபட்டனர்
மீரிகம பொலிஸின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் சமன் குமார திசாநாயக்க, 2010ஆம் ஆண்டு அலவ்வ பொலிஸின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியபோது, சாந்த கனேரலாலகே சாந்த சமரவீரவைக் கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் 2023 டிசம்பரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவல்ல பொலிஸின் சார்ஜென்ட் ஆர்.எல். குமார மற்றும் கான்ஸ்டபிள் ஆர்.டி.எஸ்.பி ராஜப்கச ஆகியோர் இதே குற்றச்சாட்டில் மே 4, 2024 அன்று கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதேவேளை, கொழும்பிலிருந்து வரும் தகவல்களுக்கு அமைய, நவம்பர் 18, 2024 அன்று இது தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாத கடற்படை கெப்டன் ஒருவரும் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
22 ஜூலை 2010 அன்று அலவ்வ பொலிஸால் கைது செய்யப்பட்ட தனது சகோதரர் காணாமல் போனமை குறித்து சாந்த சமரவீரவின் மூத்த சகோதரி லலிதா ஜயசிங்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 25 ஆம் திகதி சட்டத்தரணி சூலா சஞ்சீவ அதிகாரியுடன் அலவ்வ பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அவர், தனது சகோதரன் பொலிஸிஸ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டார். மறுநாள் அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதாகக் பொலிஸார் கூறிய போதிலும், அது இடம்பெறவில்லை.
“பின்னர் தலையில் ஏற்பட்ட வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு ஒரு செய்தி கிடைத்தது. பின்னர் நாங்கள் அங்குச் சென்ற போது, எனது சகோதரர் கழிப்பறையில் இருந்த ஜன்னல் மூலம் தப்பித்தார் என அவர்கள் கூறினர் .”
ஜூலை 28ஆம் திகதி அவர் பொலிஸ் நிலையத்திலும் இருக்கவில்லை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவும் இல்லை.
தனது தம்பி காணாமல் போனது தொடர்பாக ஜூலை 28, 2010 அன்று தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை, பொலிஸாருக்கு சாதகமான முறையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரித்ததாக லலிதா ஜெயசிங்க 2018ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
சாந்த சமரவீர காணாமல் போனது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டதாக அறிக்கை எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
கடத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் கன்சைட் முகாமில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில், கடற்படைத் தளபதியான வசந்த ஜயதேவ கரணாகொட ஒரு முக்கிய சந்தேகநபராக காணப்படுவதோடு, கடந்த 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவான நிலையில், கன்சைட் முகாமில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டிலிருந்து வெளியேறினார்.
2007 முதல் செயல்பட்டு வரும் கன்சைட் சித்திரவதை மையம் நிறுவப்பட்டதற்குப் பின்னால் இருந்ததாக நம்பப்படும் கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவு 2006 முதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டும், இதுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும், சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூகா தலைமையிலான ITJP, நிஷாந்த உலுகேதென்னவைத் தவிர, முன்னாள் கடற்படைத் தளபதிகளான திசர எஸ்.ஜி. சமரசிங்க உள்ளிட்ட ஜே.எஸ்.கே. கொலம்பகே, எம்.டி.டி.ஜே தர்மசிறிவர்தன, சிசிர ஜயக்கொடி, எஸ்.எஸ். ரணசிங்க, டி.சி. குணவர்தன, யு.எஸ். ருவன் பெரேரா, டி.டபிள்யூ.ஏ.எஸ். திசாநாயக்க, என்.பி.ஜே. ரொசைரோ, என்.பி.எஸ். ஆடிகல மற்றும் எஸ்.ஏ.எம்.ஜே. பெரேரா ஆகிய கடற்படை அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டில் பரிந்துரைத்தது.
நிஷாந்த உலுகேதென்ன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற பின்னர், ஜூலை 15, 2020 அன்று இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் டிசம்பர் 18, 2022 அன்று ஓய்வு பெறும் வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.
ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த 8ஆவது நிர்வாகத் தலைவரும் ஆயுதப் படைகளின் தளபதியுமான ரணில் விக்ரமசிங்க, தான் கற்ற கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னாள் மாணவரான அட்மிரல் (ஓய்வுபெற்ற) தமித் நிஷாந்த சிறிசோம உலுகேதென்னவை 2023 ஒக்டோபரில் கியூப குடியரசின் இலங்கைத் தூதுவராக நியமித்தார்.
அட்மிரல் (ஓய்வுபெற்ற) உலுகேதென்ன, கியூபாவுக்கான இலங்கைத் தூதராக தனது நற்சான்றிதழ்களை பெப்ரவரி 13, 2024 அன்று ஹவானாவில் உள்ள புரட்சிகர அரண்மனையில் கியூபா குடியரசின் ஜனாதிபதியிடம் வழங்கினார்.