தமிழ் மக்களின் துயரங்களை தேசிய மக்கள் சக்தியே தீர்க்கும் – றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி

தமிழ் மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் துயரங்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மட்டுமே தீர்வுகளை வழங்க முடியுமென யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பகத்தை நவாலிப் பகுதியில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒரு பயிரை விதைத்து அதை வளர்த்து பின்னர் அது பூத்து காய்த்து கனி தரும் வரை மக்கள் அந்த பயிரை பாதுகாத்து பலன் பெறுகிறார்கள். அதேபோல் தேசிய மக்கள் சக்தியின் கனிகளைப் பெறும் வரை மக்கள் ஆதரவு தந்து அதன் பயனைப் பெறவேண்டும்.
இம்முறையும், மக்கள் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து, கிராமங்களை எம்முடன் இணைந்து மேம்படுத்த வேண்டும் என்றார்.
மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நவாலி பிரதேச சபை வேட்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.