‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா

‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா

நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம்.

இவர்கள் இந்த பயணத்தில் நிலவை சுற்றி வரவுளள்னர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969-ல் முதன் முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.

இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

இருப்பினும் அந்த முயற்சி பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த சூழலில் அந்த தடைகளை எல்லாம் தாண்டி இன்று ‘ஆர்டெமிஸ் -2’ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க மற்றும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர். அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் (விண்வெளி வீராங்கனை) மற்றும் கனடாவின் ஜெர்மி ஹன்சன் ஆகிய விண்வெளி வீரர்கள் அடங்கியுள்ளனர்.

கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர், மைய பகுதியில் உள்ள இயந்திரம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக சென்றது.

இதனை அடுத்து, ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டு இருந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்புவதற்கான முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த விண்கலம் முதல் நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையை சுற்றிவந்த பின்னர் நிலவை நோக்கி செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் ‘ஓரியன்’ விண்கலம் நிலவை சுற்றி வந்த பின்னர் பூமிக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )