நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (29) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்றில் முன்னிலையாக தவறியமைக்காக அவருக்கு எதிராக நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக மாலைத்தீவு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரது வருகையை எதிர்பார்த்து பல சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி கட்டுநாயக்கவில் நாமல் ராஜபக்வை கைது செய்ய திட்டம் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரது ஆதரவாளர்கள் குழு விமான நிலைய வளாகத்திற்கு வந்திருந்தனர்.
அத்தகைய பின்னணியில், நாமல் ராஜபக்ச இன்று (29) காலை 11:30 மணியளவில் மாலைத்தீவின் மாலேயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 102 மூலம் வந்தார்.
பின்னர், நாமல் ராஜபக்ச மதியம் 12:30 மணியளவில் சிறப்பு விருந்தினர் அறை வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கு எதிரான போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நேற்று (28) வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அத்தகைய பின்னணியில்தான் வெளிநாட்டில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இவ்வாறு நாடு திரும்பினார்.