இணைய மோசடிகளில் ஈடுபட்ட பத்தாயிரம் பேரை நாடுகடத்தும் மியன்மார் போராளிகள் குழு

மியன்மாரின் இனப் போராளிக்குழு ஒன்று 10,000 பேரை தாய்லாந்துக்கு நாடுகடத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளது.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைபெற்ற இணைய மோசடிகளில் சம்பந்தபட்டவர்களே இவர்கள் என்றும் குறித்த போராளிக் குழு கூறியுள்ளது.
சட்டவிரோதச் செயல்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடுகடத்தல் நடவடிக்கை இடம்பெற இருப்பதாக குறித்த குழு கூறியுள்ளது.
மியன்மாரின் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மோசடிச் சம்பவங்கள் பெருகிவிட்டன. சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படும் வெளிநாட்டினரே அங்கு மோசடிச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
உலகம் முழுவதும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இந்தத் தொழில் பல மில்லியன் டொலர் மதிப்புடையது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“எங்கள் மண்ணில் இருந்து எல்லா மோசடிகளையும் துடைத்தொழிப்போம் என்று ஏற்கெனவே அறிவித்து இருந்தோம். அதனை தற்போது நிறைவேற்றுகிறோம்,” என்று காரென் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BGF) பேச்சாளர் நைங் மவுங் ஸாவ் ஏஎஃப்பி செய்தியிடம் கூறினார்.
“நாடுகடத்துவோர் அடங்கிய பட்டியலைத் தயார் செய்துள்ளோம். கிட்டத்தட்ட 10,000 பேரை விரைவில் அனுப்பி வைப்போம்,” என்றார் அவர்.
நாடுகடத்தல் கட்டம் கட்டமாக நடைபெறும் என்றும் ஒவ்வொரு நாளும் 500 பேர் அடங்கிய குழுவாக மியன்மாரில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதுபற்றி கருத்துகளைத் திரட்ட தாய்லாந்து அதிகாரிகளை ஏஎஃப்பி தொடர்புகொண்டுள்ளது.
எல்லைப் பாலம் வழியாக ஏற்கெனவே 61 பேரை எல்லைப் பாதுகாப்புப் படை தாய்லாந்துக்கு அனுப்பியுள்ளது.
தற்போது தினமும் அனுப்பத் தயாராக வைக்கப்பட்டு இருக்கும் 500 பேர் அடங்கிய குழுக்களில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் உள்ளதாக மேஜர் நைங் மவுங் ஸாவ் தெரிவித்துள்ளார்.