யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்

யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்

யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில், தனது குடும்ப வறுமை காரணமாக பழ வியாபாரத்தில் சிறுவன் ஒருவன் ஈடுபட்டு , வருமானத்தை ஈட்டி தனது குடும்பத்தினை பார்த்து வருகின்றான்.

அச்சிறுவனிடம் யாழ் . மாநகர சபையின் வரி அறவீட்டு உத்தியோகஸ்தர் ஒருவர் வரி அறவீடு செய்யாது , சிறுவனை மிரட்டி பழங்களை லஞ்சமாக பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுவன் பழங்களை கொடுக்க மறுத்துள்ளான்.

இந்நிலையில் சிறுவன் சட்டவிரோதமான முறையில் பழ வியாபாரம் செய்வதாக கூறி சக உத்தியோகஸ்தர்களுடன் சென்று, சிறுவனின் பழங்களை பறிமுதல் செய்துள்ளார். அதன் போது சிறுவனையும் தாக்கியுள்ளனர்.

சிறுவனின் பழங்களை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றும் போது பழங்கள் பழுதடைந்து விடும், அவற்றை ஒழுங்கான முறையில் அடுக்க வேண்டும் என சிறுவன் கூறிய போதிலும், அதனை பொறுப்படுத்தாது , சிறுவனின் பழங்களை அடாத்தாக பறித்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

வீதியோரமாக பழ வியாபாரத்தில் இது வரை காலமும் சிறுவன் ஈடுபட்டிருந்த போது பழங்களை லஞ்சமாக பெற்று வந்தவர், சிறுவன் இலஞ்சம் கொடுக்க மறுத்த போது, தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து பழங்களை பறித்து சென்ற சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை தன்னிடம் லஞ்சம் வாங்கிய உத்தியோகஸ்தர் தொடர்பில் சிறுவனால் யாழ் . மாநகர சபை ஆணையாளரிடம் எழுத்து மூல முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

Share This