மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு – 19 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகள் 12 பேர் விடுதலை

கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 12 பேரையும் விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதி மும்பையின் புறநகரில் உள்ள ஏழு ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இதில் 188 பேர் கொல்லப்பட்டதுடன், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகுள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 192 பேரிடம் சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு விசாரணைகளின் நிறைவாக ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்து.
இந்த தீர்ப்பிற்கு பின்னர், மகாராஷ்டிர அரசு குற்றவாளிகளின் மரண தண்டனை உறுதி செய்ய கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதே நேரத்தில், தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றில் பிரதிவாதிகள் மேல்முறையீடு செய்தனர்.
இந்நிலையில், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளான அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு “முற்றிலும் தவறிவிட்டது” தெரிவித்துள்ளது.
“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டதாகவும் எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நம்புவது கடினம் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டு, தள்ளுபடி செய்யப்படுவதாக,” மும்பை உயர் நீதிமன்ற அமர்வு கூறியது.
விசாரணையின் போது மீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வரைபடங்கள் குண்டுவெடிப்புகளுடன் தொடர்பில்லாததாகத் தெரிகிறது என்றும் நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், குண்டுவெடிப்புகளில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறியுள்ளதாகவும் மும்பை உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
ந்தச் சம்பவம் நடந்த 19 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகள் 12 பேரை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.