பேரிடரில் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்

பேரிடரில் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்கள், உறவினர்கள் வீடுகள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

76,801 குடும்பங்களைச் சேர்ந்த 267,700 நபர்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும், 10,340 குடும்பங்களைச் சேர்ந்த 34,175 நபர்கள் 358 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

149,460 குடும்பங்களைச் சேர்ந்த 499,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 638 பேர் உயிரிழந்துள்ளதுடன் 175 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், பேரிடரில் 6121 வீடுகள் முழுமையான சேதமடைந்துள்ளதாகவும், 114,314 வீடுகள் பகுதி அளிவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி நீர்ப்பாசனத்  திணைக்களத்திற்கு சொந்தமான 10 நீர்த்தேக்கங்களில் இருந்து தொடர்ந்தும் நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

மேலும் 18 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களில் இருந்து ஏதோ ஒரு மட்டத்தில் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக, திணைக்களத்தின் இயக்குநர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )