இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவு உண்பதை கட்டுப்படுத்தியுள்ளன – ஐ.நா. தகவல்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவைத் தவிர்ப்பது, குறைவான உணவை உண்பது அல்லது உணவின் அளவு குறைத்தல் போன்ற சமாளிக்கும் உத்திகளை நோக்கித் திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் 27 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்தை (WFP) மேற்கோள் காட்டி குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடு 12.2 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் வறுமை விகிதம் 24.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். 2021 மற்றும் 2024 க்கு இடையில் உணவு விலைகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. பொருளாதார மீட்சி இருந்தபோதிலும், வேலைவாய்ப்பு மற்றும் உண்மையான ஊதியங்கள் நெருக்கடிக்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே உள்ளன. இதன் விளைவாக வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்ததுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்ள தரவுகளின் பிரகாரம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8.9 சதவீதம் அல்லது அரசாங்க வருவாயில் கிட்டத்தட்ட 60 சதவீதம், அரசாங்கக் கடனுக்கான வட்டி செலுத்துதல்களைச் செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
“சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83 மற்றும் 1.88 சதவீத ஒதுக்கீட்டைப் பெற்றன. இது முந்தைய ஆண்டை விட அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. மேலும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியான முறையே மூன்று மற்றும் ஆறு சதவீத ஒதுக்கீட்டை நோக்கி நகர்கிறது என குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த கால மற்றும் தற்போதைய மனித உரிமை மீறல்களுக்கு, குறிப்பாக பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளுக்கு இலங்கை பொறுப்புக்கூறவில்லை என்றும் அறிக்கை கூறுகிறது.
குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரவும் தண்டிக்கவும் அரசின் விருப்பமின்மை அல்லது இயலாமையை வெளிப்படுத்துகிறது.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட குற்றவியல் மற்றும் 280க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பெரும்பாலானவை ஆரம்ப கட்டங்களில் உள்ளன. அவற்றில் எதுவும் தண்டனைக்கு வழிவகுக்கவில்லை என குறித்த அறிக்கை மேலும் கூறுகிறது.
2018 இல் நிறுவப்பட்டதிலிருந்து, காணாமல் போனோர் அலுவலகம் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் குறித்து இதுவரை தெளிவுபடுத்தவில்லை. பாதிக்கப்பட்ட சமூகங்களிடமிருந்து தொடர்ந்து நம்பிக்கையின்மையே எதிர்கொள்ளப்படுகிறது என்றும் அறிக்கை மேலும் கூறுகிறது.