
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண மையங்களில் தங்கியுள்ளன
டித்வா பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள 762 நிவாரண மையங்களில், 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிகமான நிவாரண மையங்கள் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளன. கண்டி மாவட்டத்தில் 222 நிவாரண மையங்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலான நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 206 மையங்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளை மாவட்டத்தில் 155 மையங்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பங்களை அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
சில குடும்பங்களின் வீடுகள் முழுமையாக அழிந்துவிட்டன என்றும், சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும், பலர் தங்கள் பழைய வசிப்பிடங்களில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை காரணமாகத் திரும்பிச் செல்லத் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் தற்போது மூன்று மாதங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவை வழங்குவதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபா வழங்குதல் மற்றும் அரச காணிகளை வழங்குதல் உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.
மீள்குடியேற்றச் செயன்முறையை விரைவுபடுத்துவதற்காக, அரச காணிகள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
