அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார்.
ராஜ்பவனில் இன்று (31) காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இதன் மூலம், காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் தெலங்கானா மாநிலத்தின் முதல் முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் சுமார் 30% முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தபோதிலும், முஸ்லிம் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லாதிருந்தது.
எனினும், இந்த நியமனத்திற்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலைக் குறிவைத்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
தற்போது 62 வயதாகும் அசாருதீன், 1984 முதல் 2000 வரையான காலப்பகுதியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அவர் டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள் மற்றும் 21 அரைச் சதங்களுடன் 6,215 ஓட்டங்களையும, ஒருநாள் போட்டிகளில் 7 சதங்கள் மற்றும் 58 அரைச் சதங்களுடன் 9,378 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்

