ஓய்வை அறிவித்தார் மிட்செல் ஸ்டார்க்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.
இதை கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. 35 வயதான ஸ்டார்க், கடந்த 2012ஆம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் விளையாடி இருந்தார்.
மொத்தம் 65 போட்டிகளில் விளையாடி, 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருந்தார். இந்த சூழலில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
“இப்போதும், எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன். அவுஸ்திரேலிய அணிக்காக நான் விளையாடிய டி20 கிரிக்கெட் போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் இனிதானது.
கடந்த 2021ஆம் ஆண்டில் நாங்கள் டி20 உலகக் கிண்ணத்தை வென்றோம்.
எதிர்வரும் ஆஷஸ் தொடர், இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர், 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் விளையாடும் வகையில் நான் என்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதன் மூலம் என்னால் உடற்தகுதியுடன் இருக்க முடியும். அதேநேரத்தில் அடுத்த டி20 உலகக் கிண்ண தொடருக்கான பந்துவீச்சை யூனிட்டை தயார் படுத்தவும் இது வாய்ப்பளிக்கும் என கருதுகிறேன்” என ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.