காணாமற்போன மஞ்சள் அனகொண்டா கண்டுப்பிடிக்கப்பட்டது

காணாமற்போன மஞ்சள் அனகொண்டா கண்டுப்பிடிக்கப்பட்டது

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமற்போனதாகக் கூறப்பட்ட ‘மஞ்சள் அனகொண்டா’  பாம்பு,  பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 07 ஆம் திகதி  “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் சிலர் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடளித்திருந்தனர்.

சுமார் ஒன்றரை அடி நீளமுடைய இந்த “மஞ்சள் அனகொண்டா” பாம்பு செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த பாம்பு காணாமற்போயுள்ளது. இது தொடர்பில் மிருகக்காட்சிசாலையின் சேவையாளரிடம் விசாரிக்கையில், பாம்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கதவு சரியாக மூடப்படவில்லை என்பதால் பாம்பு வெளியே சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களாக ஊழியர்களை ஈடுபடுத்தி மிருகக்காட்சிசாலை முழுவதும் தேடுதல் நடத்திய போதிலும், அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பராமரிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று (16) அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார். இத்தகைய பின்னணியிலேயே, ஊர்வன பூங்காவில் உள்ள இரும்புப் பெட்டி ஒன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் அனகொண்டா குட்டி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பராமரிப்பாளர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள்  இந்தக் குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )