ஐந்தாண்டுகளில் 2000 மெகா வோல்ட் சூரிய மின் சக்தி உற்பத்தி – இதுவே அரசாங்கத்தின் இலக்கு என்கிறார் அமைச்சர் குமார ஜெயக்கொடி

அடுத்த 5 வருடங்களில் நாம் 2000 மெகா வோல்ட் சூரிய சக்தி மின்சாரத்தினை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம் என்று வலுச்கதி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகளின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சூரிய சக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களும் எமக்குள்ளன. சூரியசக்தி தொடர்பில் எமது கொள்கையானது நிலையானது என்பதோடு பிராந்திய, சர்வதேச ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.
சர்வதேச நாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதனால் தொழில்நுட்பத்தினை மேம்படுத்திக்கொள்வதோடு முதலீடுகளையும், நிதி உள்வருகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தவும், புதிய சந்தை அனுகல்களை அடையவும் உள்நாட்டு கைத்தொழில்துறை மேம்பாட்டுக்கும் சூரியசக்தியால் நன்மைகள் உள்ள நிலையில் அது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.
இயற்கை வளங்களின் ஊடாக பெறப்படும் மின்சாரத்தின் மொத்த அளவில் 13 சதவீதமானது சூரிய சக்தியினால் பெறப்படும் மின்சாரமாக காணப்பபடுகிறது. அத்துடன் அடுத்த 5 வருடங்களில் நாம் 2,000 மெகா வோல்ட் சூரிய சக்தி மின்சாரத்தினை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். அந்த இலக்கை நாம் விரைவாகவே அடைவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
சூரியஒளி அதிகமாகவுள்ள காரணங்களில் விசேடமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருப்பதால் நுகர்ச்சியை விடவும் அதிகமான சூரிய மின்சக்தி கிடைக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் 1400 மெகா வோல்ட்டுக்கும் அதிகமான சூரிய சக்தி கிடைகின்றது. ஆகவே அதனை சேமித்து வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். மின்கலங்கள் அல்லது ஹைட்டோ ஊடாக சேமிப்பதற்கு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.