பாதுகாப்புடன் வினைத்திறன் மிக்க பொதுப் போக்குவரத்து சேவையை கட்டியெழுப்ப வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்பு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும், போக்குவரத்து சேவைகளை வழங்கும் மற்றும் செயல்படுத்தும் நிறுவனப் பிரதானிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (15) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது அரசாங்கத்தின் டிஜிட்டல் பயன்படுத்தும் திட்டத்துடன் இணைந்ததாக போக்குவரத்து சேவைக்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பான, வினைத்திறனான, முறையான போக்குவரத்து சேவையை நாட்டினுள் நிறுவுவதற்கு நிறுவன மட்டத்திலான பொறிமுறை ஒன்றை தயாரிப்பதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
இப்போக்குவரத்து சேவையுடன் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் மையப்படுத்தும் செயற்பாட்டை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தயாரித்தல், பொது மக்களின் முறைப்பாடுகளுக்காக விரைவாக பதிலளிக்கும் முறையொன்றை தயாரித்தல், இலத்திரனியல் கொடுப்பனவை முறைப்படுத்தல், பஸ் கம்பனிகளை நிறுவுதல், புதிய பஸ்களை சேவைக்கு ஈடுபடுத்தல் மற்றும் டெண்டர் முறையில் ஒழுங்குமுறைப்படுத்தல், GPS மற்றும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் உட்பட பல்வேறு துறைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, பிரதான நிறைவேற்று அதிகாரி மகேஷ் குளத்திலக்க, தேசிய போக்குவரத்து சபையின் தலைவர் பி எ சந்திரபால, நாட்டின் சகல மாகாணங்களினதும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.