
மத்திய கிழக்கு போர் பதற்றம்!! இலங்கையில் இன்னுமொரு வரிசை யுகத்துக்கு வழி வகுக்குமா?
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் உலக நாடுகளில் விலையேற்றம், பொருளாதார நிச்சயமற்ற நிலை ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்படுகின்றது.
குறிப்பாக எரிபொருள் , எரிவாயு அதிகரிப்பில் மத்திய கிழக்கு போர் செல்வாக்கு செலுத்துகின்றன.
எரிபொருளுக்காக உலக நாடுகள் மத்திய கிழக்கை தங்கியுள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் உலக நாடுகளின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் .
இவை வெறுமனே உலக நாடுகளுக்கு எரிபொருள் செலவினை மாத்திரம் அதிகரிக்காது .மாறாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
உள்ளூர் உற்பத்திகள் முதல் வெளிநாட்டு உற்பத்தி என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் .
குறிப்பாக உலக நாடுகள் தங்களது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பெருமளவு அந்திய செலாவணியை செலவிட நேரிடும்.
இவை மக்களின் அடிப்படை வாழ்க்கை செலவை அதிகரிப்பதுடன் எரிபொருள், எரிவாயு விநியோகங்களில் ஏற்படும் தாக்கம் உள்ளூர் பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
அதிக தொகையை எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடும் உலக நாடுகள் உள்ளூரிலும் எரிபொருள் விலையை சடுதியாக அதிகரிக்கும். எரிபொருள் அதிகரிப்பு நாட்டின் உற்பத்தி முதல் சேவைத்துறை என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எரிபொருள் விலையேற்றத்துக்கு இணங்க போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கும் .
போக்குவரத்து கட்டண அதிகரிப்பு விநியோகத்துக்கான செலவை அதிகரிப்பதுடன் அவை உள்ளூர் உணவு உற்பத்தி முதல் சேவைத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
. மத்திய கிழக்கு போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டி படைக்கும் ஆயுதமாக தற்போது மாறியுள்ளது.
இதேநேரம் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்படும் இடையூறுகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலைமை உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மைகளை தீவிரப்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிராந்தியத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகள், எரிசக்தி விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிதிச் சந்தைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றை தாங்கள் உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது .
இந்த வளர்ந்து வரும் போர் பதற்றம் ஏற்கனவே பலவீனமான உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தை மோசமாக்கக்கூடும் எனவும் இது தொடர்ச்சியான பணவீக்க அழுத்தங்கள், முக்கிய பொருளாதாரங்களில் வீழ்ச்சி, பல பிராந்தியங்களில் புவிசார் அரசியல் பதட்டத்தை அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது .
நிலைமை மிகவும் நிலையற்றதாகவே உள்ளது எனவும் ஏற்கனவே நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார சூழலை அதிகரிக்கிறது” எனவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக வல்லரசுக்களுக்கு மத்திய கிழக்கு போர் பாரிய தாக்கத்தையோ அல்லது பின்னடைவையோ ஏற்படுத்தாது .மாறாக தெற்காசிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் தெற்காசிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் .
இவை பல உலக நாடுகளின் பொருளாதாரங்களில் பணவீக்க அழுத்தங்களை தீவிரப்படுத்தக்கூடும் எனவும் உலகளவில் மத்திய வங்கிகளுக்கான பணவியல் கொள்கை முடிவுகளை சிக்கலாக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவு காணாத உலக நாடுகள் பெரும்பாலும் உலக நாடுகளின் உற்பத்தியையே நம்பியுள்ளதுடன் சுற்றுலாத்துறை ஊடாக அதிக அந்நிய செலவாணியை பெறும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு இது பெரும் சவாலாக மாறும்.
உலக நாடுகளில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் , பாதுகாப்பு அச்சுறுத்தலால் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். இது இலங்கை போன்ற ஆசிய நாடுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக அமையும் .
பெருந்தொகையான அந்திய செலவாணியை இறக்குமதிக்கு செலவிடும் இலங்கை போன்ற உலக நாடுகளின் பொருளாதார நெருக்கடிக்கு இந்த மத்திய கிழக்கு போர் வித்திடும்.
கொவிட் தொற்று நோய்க்கு பின்னர் இலங்கையில் உருவாகிய வரிசை யுகத்தை போன்ற இன்னுமொரு யுகத்துக்கு மத்திய கிழக்கு போர் வித்திடுமா? மத்திய கிழக்கு போர் என்பது உலக நாடுகளுக்கு ஓர் விளையாட்டு கழகமாக இருந்தாலும் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வாழ்வா சாவா என்ற நிலையே.
இலங்கையில் உள்நாட்டு போர் நிலவிய போது இலங்கை பொருளாதார, அரசியல் ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கியதுடன் பல பின்னடைவுகளையும் சந்தித்தது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு போர் முடிவற்ற போதிலும் உலக நாடுகளில் அடிக்கடி ஏற்படும் போர் முழக்கம் இலங்கையின் பொருளாதாரத்தில் காலத்துக்கு காலம் செல்வாக்கியுள்ளதுடன் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது .
தற்போது மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் இது இலங்கையின் பொருளாதாரத்துக்கு மற்றுமொறு பின்னடைவை ஏற்படுத்துமா? இவ்வாறான நிலையில் இலங்கை தனது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இராஜதந்திர ரீதியில் தனது அரசியல் தகர்வுகளை முன்னெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளதுடன் இடம் பொருள் ஏவல் அறிந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது .
ஹரியதர்ஷனி சுந்தரேஷன்
