
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி , நாஷ்வில் எஸ்சீ அணிக்கு எதிரான் போட்டியில் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் மெஸ்ஸியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோல் அடிக்கப்பட்டது. 38 வயதான மெஸ்ஸி, மியாமி அணியில் இணைந்ததிலிருந்து 92 போட்டிகளில் 81 கோல்களை அடித்துள்ளார்.
மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக 778 போட்டிகளில் 672 கோல்களையும், பிஎஸ்ஜி அணிக்காக 75 போட்டிகளில் 32 கோல்களையும் அடித்துள்ளார்.
மேலும், அவர் அர்ஜென்டினா அணிக்காக 196 சர்வதேசப் போட்டிகளில் 115 கோல்களை அடித்துள்ளார்.
அவர் அடித்த மொத்த 900 கோல்களில், 755 கோல்கள் அவரது இடது காலால் அடிக்கப்பட்டவை. தனது வலது காலால் 111 கோல்களையும், தலையால் முட்டி 30 கோல்களையும் அடித்துள்ளார்.
பெனால்டி மூலம் 112 கோல்களும், ஃப்ரீ கிக் மூலம் 70 கோல்களும் அடித்துள்ளார்.
ஸ்பானிய கழகங்களான செவில்லா, அத்லெடிக் கழகம் மற்றும் அத்லெடிகோ மெட்ரிட் ஆகியவற்றுக்கு எதிராகவே மெஸ்ஸி அதிக கோல்களை அடித்துள்ளார்.
கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸியைத் தவிர, 900 கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே வீரர் போர்த்துகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார்.
ரொனால்டோ இந்தச் சாதனையை 1,236 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார்.
41 வயதான ரொனால்டோ தற்போது 959 கோல்களுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
