அமெரிக்கத் தூதுவர் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் குறித்தும், இலங்கையில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை’ குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாடுகளில் இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இலங்கைக்கு அமெரிக்க முதலீடுகளை ஈர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ‘தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கை’யின் கீழ் உயர்கல்வி, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற நவீன துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதன் மூலம் அமெரிக்க சந்தைக்குள் நுழைவதற்கான புதிய வழிகளைத் திறந்துகொள்ள முடியும் என இதன்போது சுட்டிக்காட்டிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தொடர்புகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )