மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டம்: 30 பேர் விடுதலை

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (20) நடைபெற்றது.

விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )