பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியை திருடிச் சென்ற நபர்

வடக்கு பயாகல சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில் இரவில் நுழைந்த நபர் ஒருவர், தொலைக்காட்சி மற்றும் ஒலிபெருக்கியைத் திருடிச் சென்றுள்ளார்.
பயாகல பொலிஸ் பிரிவில் உள்ள வடக்கு பயாகல சந்திப்பில் பேருந்தின் உரிமையாளர் இரவில் தனது பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்றிருந்தார்.
இந்நிலையில், சந்தேகநபர் ஒருவர் சிலரின் உதவியுடன் பேருந்திற்குள் நுழைந்து பயணிகள் பார்ப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மதிப்புமிக்க தொலைக்காட்சிப் பெட்டியைத் திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளின் பல பாகங்கள் திருடப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்து உரிமையாளர் ஏற்கனவே பயாகல பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பயாகல பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.