பிரபாகரனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை போன்று தனக்கும் நேர்ந்துவிட்டது! மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

பிரபாகரனுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை போன்று தனக்கும் நேர்ந்துவிட்டது! மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்துள்ளது.

மூவரும் ஒருவரை ஒருவர் குற்றம் கூறி வருகின்றனர்.

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.

துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த இரண்டாம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, கருப்பு சட்டை அணிந்தும், யார் துரோகி? என்று எழுதிய அடையாள அட்டையுடன் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மேலும் ஒழுங்கு நடவடிக்கையை கைவிடக்கோரி 15 நாட்களுக்குள் மல்லை சத்யா எழுத்துப்பூர்மான விளக்கம் அளிக்கலாம் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மல்லை சத்யா கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு எதிராக மல்லை சத்யா செயல்பட்டது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருக்கிறது.

இதனால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானித்திருக்கிறேன். அதன்படி மல்லை சத்யா மதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Share This