விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தொடந்தும்பேசிய அவர்,
2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆகும் போது சீனாவில் இருந்து துப்பாக்கி ரவைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. அப்போது கோட்டபாய ராஜபக்ச நேரில் என்னை அழைத்துப் பேசினார்.
“பொன்சேகா நாம் கடனுக்கு அல்லவா சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டு வருகின்றோம். சீனாவில் இருந்து அனுப்பப்படாவிட்டால் எனக்கு எதனையும் செய்ய முடியாது என்றார்.
நான் அப்படியே பசில் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றேன். இதன்போது பசில் ராஜபக்ச தொலைபேசியூடாக பி.பி.ஜயசுந்தரவிடம் கூறினார். 100 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கூறினார்.
அந்த சந்தரப்பத்தில் பசிலுடன் ஒரு மணி நேரம் கதைத்துக்கொண்டிருந்தேன். 2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த கதையை அவர் என்னிடம் கூறினார்.
“நாம் இவ்வாறானதொரு வேலையை செய்தோம். தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதாக விடுதலைப் புலிகள் வாக்குறுதி அளித்தனர்.
கடற்புலிகளின் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்த டோரா படகுகள் மலோசியாவில் உள்ளன. அதற்கு பணம் வழங்க வேண்டும். அதற்காக இரண்டு மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்றனர்.
அதில் எந்நதப் பிரச்சினையும் இல்லையென நாம் அதனை ஏற்றுக்கொண்டோம். அயல் நாடுகளில் இருந்து தேர்தல் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு மில்லியன் டொலர் எமக்கு கிடைத்தது.
கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளிநொச்சியில் பிரபாகரனிடம் வழங்கியதாக” பசில் ராஜபக்ச என்னிடம் கூறினார். அவ்வாறு பணம் வழங்கும் போது மலையக அரசியல்வாதிகள் இருந்ததாகவும் பசில் கூறினார்.
அந்த டோரா படகுகளை பயன்படுத்தியே விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் கடற்படையின் 10 டோரா படகுகளை மூழ்கடித்தனர். அதில் 150 கடற்படையினர் உயிரிழந்தனர்.
மகிந்த ராஜபக்ச தன் மகனை கடற்படையில் இணைத்தார். ஆனால் மகன் கடலுக்கு செல்லவில்லை, கொழும்பில் இருந்துகொண்டு ரக்பி விளையாடினார். கார் பந்தயத்தில் கார் ஓட்டினார்.
2009ஆம் ஆண்டு நாங்கள் யுத்த களத்தில் இருந்தோம். ஜனவரி 27ஆம் திகதி கோட்டபாய என்னிடம் அன்பாக கதைத்தார்.
“சரத் நீங்கள் இரண்டரை வரும் நன்றாக யுத்தம் செய்தீர்கள் அல்லவா. நீங்கள் களைப்படைந்திருப்பீர்கள் அல்லவா. அதனால் ஜகத் ஜயசூரிய என்ற ஒருவர் உள்ளார் அல்லவா. அவரிடம் பொறுப்பை வழங்கிவிட்டு நீங்கள் சற்று ஓய்வு எடுங்கள்” என கூறினார்.
நான் அவரிடம் பொறுப்பை வழங்க மாட்டேன் என கூறினேன். மறுநாள் ஜனவரி 28ஆம் திகதி மகிந்த என்னை தொடர்புகொண்டார். ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
நான் இல்லையென்றேன். ஆனாலும் எங்களுக்கு அந்த உத்தரவை மீற முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் எதிரிகள் ஜனவரி 31ஆம் திகதி நந்திக்கடல் ஊடக வந்து பாரிய தாக்குதலை நடத்தினர்.
மார்ச் நடுப்பகுதியில் முடியவேண்டிய யுத்தம் மே மாதம் நடுப்பகுதி வரை கொண்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான ஆயுதங்களை நாம் இழந்தோம்.
இதன் போது ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும். நான் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.
மேற்கூறிய சம்பவங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
யுத்தம் நிறைவடையவிருந்த சந்தரப்பத்தில் யுத்தத்தை நிறுத்த கோட்டபாய தரப்பினர் முயற்சி செய்தனர். முக்கிய தளபதிகளை யுத்த களத்தில் இருந்து மீள அழைத்தனர்.
போர் முடிய வேண்டும் என இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட நேரத்தில் யாராவது இப்படியொரு வேலைகளில் ஈடுபடுவார்களா?
“2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆருகில் வருகின்றது அல்லவா, அந்த தேர்தலில் வெற்றிபெற பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும்.
பிரபாகரனை உயிருடன் காப்பாற்றி தமிழ் மக்கள் கோபமடையாதவாறு யுத்தத்தினை நிறுத்தி தமிழ் மக்களை கவர்வதற்கே மகிந்த ராஜபக்ச இவ்வாறு செய்தார் என பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் காணொளி ஒன்று உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன் எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.